LATEST NEWS
“பின்னால காதலி இருந்தா பைக் ஓட்டுறவருக்கு உற்சாகம் வர்றது இயல்புதான்” 19 வயது வாலிபரின் விபத்து வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கொடுத்த சுவாரசிய தீர்ப்பு..!!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான கோபால் என்ற வாலிபர் கடந்த 2018ஆம் ஆண்டு தனது பைக்கின் பின் இருக்கையில் ஒரு இளம்பெண்ணை அமரவைத்துக்கொண்டு வீரபாண்டி-வலையபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேனும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், கோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து வழக்கை விசாரித்த தேனி நீதிமன்றம், உயிரிழந்த வாலிபரின் பெற்றோருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு (இன்சூரன்ஸ்) நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, விபத்து குறித்து சுவாரசியமான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். “அதிகாலை நேரத்தில் பைக்கின் பின் இருக்கையில் காதலி அமர்ந்திருக்கும்போது, எந்தவொரு இள வயது ஓட்டுநருக்கும் இயல்பாகவே ஒருவித உற்சாகம் ஏற்படுவது இயற்கைதான்” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், விபத்து வரைபடத்தை ஆய்வு செய்த நீதிபதிகள், வேன் சரியான பாதையில்தான் வந்துள்ளது என்றும், பைக் ஓட்டிய இளைஞர் போக்குவரத்து விதிகளை மீறி தவறான பக்கத்தில் (வலது புறம்) சென்றுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினர். எனவே, இந்த விபத்திற்கு உயிரிழந்த வாலிபரின் கவனக்குறைவும் 25 விழுக்காடு காரணம் என நிர்ணயித்த நீதிமன்றம், அதற்கேற்ப இன்சூரன்ஸ் இழப்பீட்டுத் தொகையில் 25 சதவீதத்தைக் குறைத்து மீதித் தொகையை வழங்குமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
