LATEST NEWS
ஐயோ கொடுமையே… ஒரே ஒரு செல்போன்… அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… கிணற்றில் இறங்கிய 2 இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த மொபைல் போனை எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள், நச்சு வாயு தாக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த இளைஞர்கள் பீம்ராஜு மற்றும் நரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சம்பவம் திருப்பதியில் உள்ள சிவஜோதி நகர் பகுதியில் நடந்துள்ள நிலையில், இத்தகவல் அறிந்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை தொடங்கினர்.
கிடைத்த தகவலின்படி, பீம்ராஜுவின் மொபைல் போன் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்துள்ளது. போனை எடுப்பதற்காக பீம்ராஜு கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாக மேலே வரவில்லை, எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் கவலையடைந்த நரேஷ், அவரைக் காப்பாற்றுவதற்காகக் கிணற்றுக்குள் இறங்கினார். ஆனால் கிணற்றின் அடியில் தேங்கியிருந்த நச்சு வாயு காரணமாக இருவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
உயிரிழந்த இருவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், திருப்பதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. தகவல் அறிந்ததும் காவல்துறையினரும் தீயணைப்புப் படை வீரர்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு உடல்களை மீட்டனர். அலிபிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக எஸ்.வி.ஆர்.ஆர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அலிபிரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
