LATEST NEWS
உச்சக்கட்ட அலட்சியம்..! ஓடும் ஆம்புலன்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட நோயாளி.. கதவு திறந்ததே தெரியாமல் வண்டியை ஓட்டிய டிரைவர் – அலறிய பொதுமக்கள்..!!
மகாராஷ்டிர மாநிலம் புனே பிம்ப்ரி-சிஞ்ச்வடி பகுதியில் அமைந்துள்ள, மாநகராட்சியால் நடத்தப்படும் PCMC PGI Yashwantrao Chavan Memorial Hospital (YCM) மருத்துவமனைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸில் இருந்து நோயாளி ஒருவர் ஸ்ட்ரெச்சருடன் சாலையில் விழுந்த அதிர்ச்சிச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. மருத்துவமனை வளாகத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த ஆம்புலன்ஸின் பின்பக்கக் கதவு திடீரென எதிர்பாராதவிதமாகத் திறந்ததால், உள்ளே படுக்க வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத நோயாளி ஸ்ட்ரெச்சருடன் சேர்த்து அப்படியே தார்ச் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்து நடந்ததை அறியாத ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தொடர்ந்து வாகனத்தைச் செலுத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கூச்சலிட்டு, ஆம்புலன்ஸைத் துரத்திச் சென்று அதை நிறுத்தினர்.
பொதுமக்கள் இந்த அலட்சியச் செயலைத் தங்களின் மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநரைச் சூழ்ந்து கேள்வி எழுப்பினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் நோயாளிக்கு பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், அவர் உடனடியாக மீண்டும் அதே மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவசர மருத்துவச் சேவையில் நடந்துள்ள இந்த அப்பட்டமான அலட்சியம் குறித்து செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஓட்டுநர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
