CRIME
“பெண் மீது படுத்து வாயைப் பொத்துவது கற்பழிப்பு முயற்சி அல்ல” – பாட்னா உயர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு..!!
“ஒரு பெண் மீது படுப்பதோ அல்லது அவரது வாயைப் பொத்துவதோ மட்டுமே குற்றமாகும்” என்று பாட்னா உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. பீகார் மாநிலம் பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு விதவைப் பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து விளக்கை அணைத்துவிட்டுப் பெண்ணின் மீது படுத்து வாயைப் பொத்தியுள்ளார். இதுதொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட நபருக்குக் கீழ் நீதிமன்றம் விதித்த கற்பழிப்பு முயற்சி தண்டனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி சந்தீப் குமார் அமர்வு, கற்பழிப்பு முயற்சி குற்றத்தை நிரூபிக்க வெறும் தவறான எண்ணம் அல்லது அநாகரிகமான நடத்தை மட்டுமே போதுமானது அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் ஆடைகளைக் களைந்ததாகவோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவோ எவ்வித உறுதியான ஆதாரங்களும் இல்லை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட நபரின் செயல் பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் இருந்ததால், ஐபிசி (IPC) பிரிவு 354-ன் கீழ் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது சிறைத் தண்டனை ஏற்கனவே அவர் சிறையில் கழித்த காலத்தோடு குறைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
