CRIME
“காப்பாத்துங்க.. மூச்சு முட்டுது..!” யூடியூப் வீடியோவை நம்பி பேராசை.. நள்ளிரவில் தங்கச் சுரங்கத்திற்குள் இறங்கிய நபருக்கு நேர்ந்த கதி.. திடுக்கிடும் பின்னணி..!!
ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில், யூடியூப் வீடியோவைப் பார்த்துத் தங்கம் எடுக்கும் ஆசையில் ஆபத்தான மலைச் சுரங்கத்திற்குள் இறங்கி உயிருக்குப் போராடிய வாலிபரை, தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து பத்திரமாக மீட்டுள்ளனர். நெல்லூர் மாவட்டம் புச்சிரெட்டி பாலேனியைச் சேர்ந்த பிரபாகர் ரெட்டி மற்றும் அவரது நண்பரான பள்ளி பாலேனியைச் சேர்ந்த கிஷ்டய்யா ஆகிய இருவரும், ராமகிரி மலையில் கைவிடப்பட்ட பழைய தங்கச் சுரங்கம் இருப்பதாக யூடியூப்பில் பார்த்துள்ளனர். அங்குக் சென்றால் எளிதாகத் தங்கம் எடுத்து பணக்காரர் ஆகலாம் எனத் திட்டம் தீட்டிய இருவரும், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் யாருக்கும் தெரியாமல் ராமகிரி மலைப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
யூடியூபில் கூறப்பட்ட இடத்தைக் கண்டறிந்த பிறகு, பிரபாகர் ரெட்டி தனது உடலில் கயிற்றைக் கட்டிக்கொண்டு ஆழமான சுரங்கத்திற்குள் இறங்கியுள்ளார். ஆனால், உள்ளே செல்லச் செல்லக் கடுமையான இருட்டும், போதிய ஆக்சிஜன் இல்லாமல் மூச்சுத் திணறலும் ஏற்பட்டதால், அவர் உயிர் பயத்தில் தன்னைத் தூக்குமாறு கூச்சலிட்டுள்ளார். மேலே இருந்த கிஷ்டய்யா தனது நண்பரை மீட்கப் பல்வேறு முயற்சிகளைச் செய்தும் முடியாததால், உடனடியாக மலையிலிருந்து கீழே இறங்கி ராமகிரி காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று போலீசாரிடம் கண்ணீருடன் உதவி கோரியுள்ளார்.
விஷயத்தை அறிந்த ராமகிரி போலீசார், உடனடியாகத் தர்மவரத்தில் இருந்து தீயணைப்புத் துறையினரை வரவழைத்தனர். உள்ளூர் வாலிபர்களின் உதவியோடு போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து நேற்று அதிகாலை 2 மணி வரை நீண்ட நேரப் போராட்டத்தை நடத்தி, சுரங்கத்திற்குள் தவித்த பிரபாகர் ரெட்டியைப் பத்திரமாக மீட்டனர். பேராசையால் உயிருக்கே ஆபத்தான இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நண்பர்கள் இருவரையும், இனிமேல் யூடியூப்பைப் பார்த்து இதுபோன்ற விபரீதச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று பலமாகக் எச்சரித்த போலீசார், அவர்களைப் பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.
