CRIME
“லஞ்சம் தராததால் மாதக்கணக்கில் இழுத்தடித்த லேக்பால்…” பொறுமை இழந்துதண்ணீர்த் தொட்டியில் ஏறி விவசாயி எடுத்த விபரீத முடிவு.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தின் தௌலானா தாலுகா வளாகத்தில், லஞ்ச ஊழல் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து விவசாயி ஒருவர் பிரம்மாண்ட தண்ணீர்த் தொட்டியின் மீது ஏறித் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீனிவாஸ் என்பவரின் மகனான 40 வயது விவசாயி லக்பத், தனது நிலத்தை அளவீடு செய்யக் கோரி கடந்த பல மாதங்களாக லேக்பால் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கனூங்கோ அலுவலகங்களுக்குத் தொடர்ந்து அலைந்து திரிந்துள்ளார். லஞ்சம் கொடுக்காததால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்ததால் விரக்தியடைந்த அவர், தாலுகா அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் ‘சமாதான தினம்’ நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
பொதுமக்கள் முன்னிலையில் விவசாயி தண்ணீர்த் தொட்டியின் மீது ஏறியதைக் கண்டு, அங்கிருந்த கூடுதல் மாவட்ட ஆட்சியரும் பில்குவா காவல் நிலைய அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்து திகைத்துப் போனார்கள். இதையடுத்து, அசம்பாவிதங்களைத் தடுக்க இரண்டு காவல் நிலையங்களிலிருந்து கூடுதல் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தாலுகா வளாகத்தில் திரண்ட அதிகாரிகள் மற்றும் விவசாயியின் குடும்பத்தினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரது நிலத்தை எவ்வித முறைகேடும் இன்றி உடனடியாக அளவீடு செய்து தருவதாகப் போர்க்கால அடிப்படையில் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து, அவர் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார். மக்கள் குறைகளைக் கேட்கும் சமாதான தினத்தன்று கூட ஒரு விவசாயி தண்ணீர்த் தொட்டி ஏறும் அவல நிலை நீடித்தால், சாதாரண நாட்களில் தாலுகா அலுவலகங்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும் எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
