CRIME
பலே கில்லாடி..! இன்ஸ்டாவில் சொகுசு வாழ்க்கை காட்டி.. 20 பெண் போலீசாரிடம் ரூ.24 லட்சம் அபேஸ்… டெல்லி ‘கில்லாடி’ மாப்பிள்ளை கைது..!!
இன்ஸ்டாகிராமில் ஆடம்பர கார்கள் மற்றும் சொகுசு வாழ்க்கையைக் காட்டி, டெல்லி காவல்துறையைச் சேர்ந்த சுமார் 20 பெண் காவலர்களிடம் திருமண ஆசை வார்த்தை கூறி ரூ.24 லட்சம் வரை மோசடி செய்த விக்ராந்த் தோமர் என்ற வாலிபரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், சமூக வலைதளங்களில் தன்னை ஒரு பெரும் தொழிலதிபர் மற்றும் கிரிக்கெட் பிரமுகராகக் காட்டிக்கொண்டு இந்த மோசடி வேட்டையில் ஈடுபட்டு வந்தது அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள விக்ராந்த் தோமர், தனது லிவ்-இன் பெண் கூட்டாளியின் மூலமாக டெல்லி காவல்துறையில் ஒரே பேட்சை (Batch) சேர்ந்த பெண் காவலர்களின் விவரங்களை மிகவும் திட்டமிட்டுச் சேகரித்துள்ளார். அதன்பின்னர், வாடகைக்கு எடுத்த ஆடம்பர கார்களில் வலம் வந்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். இதில் ஒரு பெண் காவலரிடம் அதிக லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் திருமண ஆசை வார்த்தைகளைக் கூறி, சுமார் 24 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிய புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், இந்த மோசடிப் பணத்தில் சுமார் 8 லட்சம் ரூபாய் ஆன்லைன் சூதாட்டத் தளங்களுக்கு மாற்றப்பட்டதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே 5 மோசடி வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த விக்ராந்த் தோமர், மீண்டும் இதே போன்ற குற்றத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளார். இவரால் ஏமாற்றப்பட்ட மற்ற பெண் காவலர்களை அடையாளம் காணவும், இந்த மோசடியில் தொடர்புடைய பணப் பரிவர்த்தனைகளை முழுமையாகக் கண்டறியவும் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
