LATEST NEWS
அடக்கடவுளே..! தடியால் அடித்து, கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்துக் கொலை… சம்பளப் பாக்கியைக் கேட்ட தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்… பதறவைக்கும் பின்னணி..!!
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் நௌகான் பகுதியில் தலித் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழந்தவர் நயா மொஹல்லாவைச் சேர்ந்தவரும், உள்ளூர் காய்கறி சந்தையில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தவருமான தர்மபால் அகிர்வார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கூலிப் பணத்தைக் கேட்டதற்காக ஜீது (எ) ஜிதேந்திர சாஹு மற்றும் அவரது பெற்றோர் தர்மபாலை தடியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நௌகான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகு, வழக்கை திரும்பப் பெறுமாறு எதிர்தரப்பினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆனால், வழக்கை வாபஸ் பெற மறுத்த தர்மபாலை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது போல் அழைத்து, கட்டாயப்படுத்தி விஷம் அருந்த வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சத்தர்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இளைஞரின் இறப்பால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் புதன்கிழமை மாலை நௌகானில் உள்ள தஹ்சீல் சவுராஹா பகுதியில் அவரது உடலை வீதியில் வைத்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் உடலை பிரதான சாலையில் வைத்து மறியல் செய்ததுடன், சாலையிலேயே விறகுகளை அடுக்கி ஈமக் கிரியைக்கான பாடையையும் அமைத்தனர். இதனால் ஜான்சி-கஜுராஹோ சாலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பாதைகளில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்ததுடன், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பிரதான குற்றவாளி ஜீது சாஹு மற்றும் அவரது கூட்டாளிகளை உடனடியாக கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உறுதியாகக் கோரினர்.
சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நௌகான் காவல் நிலையப் போலீசாரும் கூடுதல் அதிரடிப் படையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். நிர்வாக மற்றும் காவல் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினருடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அமைதிப்படுத்த முயன்றனர். மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயங்களின் அடிப்படையில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இருப்பினும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடுமையான கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் குடும்பத்தினர் உறுதியாக இருந்ததால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
