CRIME
“தம்பி வீட்டு வாசலில் எச்சில் துப்பாதீங்க” கண்டித்த இதய நோயாளி அடித்துக் கொலை: போதையில் அண்ணன்-தம்பி செய்த கொடூரம்..!!
சென்னை ஓட்டேரி சீனிவாசன் தெருவைச் சேர்ந்த பொன்னுரங்கம் என்பவரது வீட்டு வாசலில், கீழ் தளத்தில் வசிக்கும் சதீஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய சகோதரர்கள் எச்சில் துப்பியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும், அன்று இரவு சதீஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய இரு சகோதரர்களும் மதுபோதையில் மீண்டும் பொன்னுரங்கத்தின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் வீட்டு வாசலில் போதையில் ரகளை செய்த சகோதரர்களைப் பொன்னுரங்கம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட முட்டல் மோதலில், அவர்கள் பொன்னுரங்கத்தை ஓங்கி கீழே தள்ளியுள்ளனர்.
ஏற்கனவே இதய நோயாளியான பொன்னுரங்கம் கீழே விழுந்த வேகத்தில் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த ஓட்டேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த குற்றவாளிகளான சதீஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய இரு சகோதரர்களையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
