LATEST NEWS
இபிஎஸ்ஸுக்கு துரோகம்..? அதிமுகவை உடைக்க தவெக போட்ட ரகசிய ஸ்கெட்ச்.. பின்னணியில் வேலுமணி, சண்முகம்..?
தமிழகத்தில் 108 எம்.எல்.ஏ.க்களுடன் தவெக ஆட்சியைப் பிடித்த நிலையில், பெரும்பான்மைக்கு சில இடங்கள் குறைவாக இருப்பதால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நம்பி அரசு இயங்கி வருகிறது. இந்நிலையில், கூட்டணிக் கட்சிகள் இடையே நிலவும் அதிருப்தி மற்றும் எதிர்க்கட்சிகள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்றவற்றால் தவெக அரசு தற்பொழுது அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து தவெக ஆட்சியைக் காக்க, அக்கட்சியின் தலைமை அதிமுகவின் அதிருப்தி முகாமில் இருக்கும் முக்கியத் தலைவர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோருடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிக்க, அதிமுகவின் மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்களைத் திரட்டி தவெக அரசுக்கு ஆதரவளிக்கச் செய்யும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் (இபிஎஸ்) தடையையும் மீறி, அவரது சொந்தக் கட்சியின் முன்னணித் தலைவர்களே தவெகவுடன் கைகோர்க்க முயல்வது அதிமுகவிற்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் தவெக பக்கம் சாய்ந்து, கட்சிக்குள் மீண்டும் ஒரு பெரும் பிளவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இபிஎஸ் தரப்பு ஆழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
