LATEST NEWS
“1 நிமிஷம் லேட்டா வந்தா அனுமதி இல்லை.. ஆனா 13 நிமிஷம் முன்னாடியே விமானம் கிளம்புமா..?” குழந்தையுடன் தவித்த பயணியின் ஆவேசக் கேள்வி.. இண்டிகோவைக் கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!
உடல்நலமில்லாத குழந்தையுடன் பயணம் செய்த குடும்பத்தை, போர்டிங் கேட்டிற்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்ததாகக் கூறி விமானத்தில் ஏற அனுமதிக்காத இண்டிகோ நிறுவனத்தின் செயல் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. டெல்லியில் இருந்து ராஜ்கோட் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த முந்தைய விமானம் ரத்து செய்யப்பட்டதால், அவசரமாக 16,600 ரூபாய் செலவு செய்து அதிகாலை 5:30 மணி இண்டிகோ விமானத்தில் அந்தக் குடும்பம் டிக்கெட் எடுத்துள்ளது. அதிகாலை 5:06 மணிக்கே தாங்கள் போர்டிங் கேட்டிற்குச் சென்றுவிட்ட போதிலும், ஒரு நிமிடம் தாமதமாகிவிட்டதாகக் கூறி ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதாகவும், உடல்நலமில்லாத குழந்தையுடன் இருப்பதாகப் பலமுறை கெஞ்சிக் கேட்டும் ஊழியர்கள் இரக்கமின்றி நடந்து கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட பயணி இன்ஸ்டாகிராமில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
இதனால் வேறு வழியின்றி மீண்டும் 12,000 ரூபாய் கொடுத்துப் புதிய டிக்கெட்டுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், மொத்தமாக 28,600 ரூபாய் வீணாகச் செலவானதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பயணிகளுக்கு மட்டும் கடுமையான நேரக் கட்டுப்பாடு விதிக்கும் இண்டிகோ நிறுவனம், அந்த விமானத்தைத் திட்டமிட்ட நேரத்திற்கு 13 நிமிடங்களுக்கு முன்பே புறப்படச் செய்தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பல பயணிகளும் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து இண்டிகோ நிறுவனத்தைச் சாடி வருவதோடு, ஊழியர்களின் செயல்பாடு குறித்து விசாரணை நடத்தி கூடுதலாகச் செலவான 12,000 ரூபாயைத் திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
