LATEST NEWS
திமுகவுக்கு வந்த புது தலைவலி.. மாஜி அமைச்சர் மீது பாய்ந்த சொத்து மோசடி புகார்.. ஆடிப்போன உடன்பிறப்புகள்..!!
திமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் மீது நில அபகரிப்பு மற்றும் ஏமாற்றுப் புகார் கிளம்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவில் கொடுத்துள்ள மனுவில், கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அலுவலகம் அமைப்பதற்காகத் தனது நிலத்தை தற்காலிகமாகப் பயன்படுத்த அனுமதித்ததாகக் கூறியுள்ளார். ஆனால், தேர்தல் முடிவடைந்து பல மாதங்களாகியும் அந்த இடத்தை திமுகவினர் ஒப்படைக்காமல், அத்துமீறித் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனின் உதவியாளர் அளித்த உறுதியின் அடிப்படையில் தான் அந்த நிலத்தைக் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள ராஜேஷ் சோமசுந்தரம், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதற்கான வாடகை எதுவும் தராமல் தன்னை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். சட்டவிரோத முறையில் தனது சொத்தை அவர்கள் லீசுக்கு எடுத்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ள அவர், தனது இடத்தை மீட்டுக் கொடுப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தனிப்பிரிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
