LATEST NEWS
“இது போலியான போராட்டம்” நானும் ஜனநாயகன் படம் பார்த்துட்டு தான் வந்தேன்.. கையில இருக்குற மைக்கை பிடுங்கி வெளியே அனுப்புறது தான் ஜனநாயகமா..? நீட் போராட்டத்தில் கொந்தளித்த நடிகை ஷணம் ஷெட்டி..!!
சென்னை பாலன் இல்லத்தில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் தீவிரமாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் உருவெடுத்துள்ள போராட்டங்களின் எதிரொலியாக, தமிழகத்திலும் இப்போராட்டம் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரையுலகப் பிரபலங்களும் நேரில் சென்று தங்களது ஆதரவைப் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை சனம் ஷெட்டியும் வெள்ளிக்கிழமை இரவு இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வருகை தந்தார். பின்னர் மேடையில் பேசிய அவர், “இது மாணவர்களின் உண்மையான போராட்டம்; ஆனால் இம்மாபெரும் மேடையை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துபவர்களே ஜோக்கர்கள். நான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை, நேற்றுதான் அவரது ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தேன்” என்று பேசினார். மாணவர் போராட்ட மேடையில் திடீரெனச் சினிமா மற்றும் அரசியல் கருத்துகளை அவர் பேசியது அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் புதிதாக வெளியான சூழலில், அதைப்பற்றிப் போராட்ட மேடையில் பேசியதற்குப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துச் கோஷங்களை எழுப்பினர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சனம் ஷெட்டி, “நான் பேசவா, வேண்டாமா?” எனக் கேட்க, அதற்குப் போராட்டக்காரர்கள் அவரை உடனடியாக மேடையை விட்டு வெளியேறுமாறு உரக்கக் குரலெழுப்பினர். இதனால் கடும் ஆத்திரமடைந்த சனம் ஷெட்டி, “இது பேச்சுரிமையைப் பறிக்கும் செயல்; மாணவர்களின் குரலாகப் பேச நானாகவே முன்வந்து வந்தேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கோபத்துடன் வெளியேறினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சனம் ஷெட்டி, தனது அதிருப்தியைக் காட்டமாக வெளிப்படுத்தினார். “மக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் பேச வரும்போது, கையில் இருக்கும் மைக்கைப் பிடுங்கி வெளியேற்றுவதுதான் ஜனநாயகமா? இது முழுக்க முழுக்க ஒரு போலி போராட்டம்” எனக் கடுமையாகக் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு போராட்ட மேடையில் சினிமா கருத்துகளைப் பேசியதால் ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
