LATEST NEWS
“ஆடுங்க… எவ்வளவு முடியுமோ ஆடுங்க..!” தவெக அமைச்சருக்கு இடும்பாவனம் கார்த்திக் கொடுத்த மரண பதிலடி.. பரபரக்கும் அரசியல் களம்..!!
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் SFI, DYFI போன்ற அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாள்வதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இப்போராட்டங்கள் குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ரமேஷ் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. நீட் தேர்வை ரத்து செய்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் தங்கள் கட்சி உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த அவர், மாணவர்களின் போராட்ட நோக்கத்தை அரசாங்கம் மதிப்பதாகக் குறிப்பிட்டார்.இருப்பினும், நீட் எதிர்ப்புப் போராட்டத்தைப் பயன்படுத்திச் சிலர் முதல்வருக்கு எதிராக மக்களைத் திருப்ப முயன்றால், அதை அரசாங்கம் எவ்வாறு அணுக வேண்டுமோ அப்படி அணுகும் என்று ரமேஷ் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார்.
இப்பிரச்சனையில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் ஏற்கனவே குற்றம்சாட்டி வந்த நிலையில், அமைச்சரின் இந்தப் பேச்சு எரியும் தீயில் நெய்யை ஊற்றுவது போல் கொந்தளிப்பை மேலும் அதிகரித்துள்ளதுஅமைச்சரின் இந்தப் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “முதல்வருக்கு எதிராகத் திருப்பினால் அரசு எப்படி கையாளுமோ அப்படி கையாளும் என்றால், இது வெளிப்படையான மிரட்டல்தானே? மிஞ்சிப் போனால் கைது செய்வீர்கள், எவ்வளவு முடியுமோ ஆடுங்கள், அரசும் அதற்கான விளைவுகளைச் சந்திக்கும்” என்று அவர் காரசாரமாக விமர்சித்துள்ளார். இதனால் தமிழக அரசியலில் நீட் எதிர்ப்புப் போராட்டத்தைச் சுற்றியுள்ள காரசார விவாதங்கள் மேலும் சூடுபிடித்துள்ளன.
