கஜானா காலி… கார் மட்டும் எப்படி..? தமிழக அரசின் அறிவிப்பிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. எழிலன் நாகநாதன் கடும் எதிர்ப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கஜானா காலி… கார் மட்டும் எப்படி..? தமிழக அரசின் அறிவிப்பிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. எழிலன் நாகநாதன் கடும் எதிர்ப்பு..!!

Published

on

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களில் கார் இல்லாதவர்களுக்கு மட்டும் கார் வழங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவிப்பு தொடர்பாக திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவ அணிச் செயலாளருமான எழிலன் நாகநாதன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது, உதவியாளர் வழங்குவது மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட சலுகைகள் வழங்குவது தொடர்பானது. ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.3 கோடி அளவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இந்த எம்.எல்.ஏ. நிதி என்ற நடைமுறையை முத்தமிழறிஞர் கலைஞர்தான் கொண்டு வந்தார். ஒரு சட்டமன்ற உறுப்பினரின் அடிப்படைப் பொறுப்பு என்ன? சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவுகளை விவாதிப்பது, அவற்றை சட்டங்களாக மாற்றுவதற்கான பணிகளில் பங்கேற்பது, மக்களின் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைப்பது, அவர்களின் தேவைகளுக்கான திட்டங்களை உருவாக்குவதில் பங்களிப்பது, தொகுதி மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பது என்பதுதான். அதற்காகத்தான் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டது. ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி என்ற அளவில் தொகுதி மேம்பாட்டு நிதி கிடைக்கிறது என்றால், ஐந்து ஆண்டுகளில் ஒரு எம்.எல்.ஏ. தனது தொகுதிக்கு கணிசமான நிதியை நேரடியாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இப்போது அரசாங்கமே பொருளாதார நெருக்கடி இருப்பதாகச் சொல்கிறது. கடுமையான நிதிக் கட்டுப்பாட்டில் அரசு செயல்படுகிறது என்று கூறுகிறது. அப்படியிருக்கும்போது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவாக கார், உதவியாளர், சம்பளம், பெட்ரோல் மானியம் போன்ற சலுகைகளை வழங்குவது அவசியமா? ADR உள்ளிட்ட அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும், தற்போதைய சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், ஏழை, எளிய, சாமானிய மக்களை சட்டமன்றத்திற்கு கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் கூறும்போது, உண்மையில் யாருக்கு வாகனம் தேவைப்படுகிறது, யாருக்கு தேவையில்லை என்பதை அவர்களுடைய அஃபிடவிட்டின் அடிப்படையில் மதிப்பீடு செய்யலாமே? பெரிய அளவிலான சொத்துகளையும், வாகனங்களையும் வைத்திருக்கும் ஒருவருக்கும், உண்மையில் வாகன வசதி இல்லாத ஒருவருக்கும் ஒரே மாதிரியான சலுகை வழங்குவது சரியான அணுகுமுறையா?. தேவைப்படுகிற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் உதவி வழங்கும் முறையை உருவாக்கலாம்.

Advertisement

இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், ஒருபுறம் விவசாயக் கடன் தள்ளுபடி, பல்வேறு நலத்திட்டங்கள், நிதிப் பற்றாக்குறை என்று கூறுகிறீர்கள். மறுபுறம், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார், உதவியாளர், பெட்ரோல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறீர்கள். இது அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்த கேள்வியை எழுப்புகிறது. மேலும், முந்தைய ஆட்சியினர் கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்றார்கள், கடுமையான நிதிச்சுமையை விட்டுச் சென்றார்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் அரசாங்கமே, இப்போது இப்படிப்பட்ட புதிய செலவினங்களை அறிவிக்கும்போது, அது இரட்டை நிலைப்பாடாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in