LATEST NEWS
“யார் ரீல்ஸ் போடுகிறார்… யார் பத்திரிக்கையாளர் என்றே தெரியவில்லை..” போராட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. நீதிமன்றத்தில் மத்திய அரசு வைத்த அதிரடி வாதம்..!!
டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களின் போது பெண் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு தனது பதிலை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தொடர்ந்த மனுவில், போராட்டம் நடக்கும் இடங்களில் பெண் செய்தியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற பெண் நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். அப்போது அவர், “தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் கையில் மொபைல் போன் வைத்துள்ள யாருமே செய்தி சேகரிப்பாளர் ஆகிவிடுகின்றனர்” என்று கூறினார். மேலும், “இன்றைய சூழலில் யார் உண்மையான பத்திரிகையாளர், யார் சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் வீடியோ போடுபவர் என்றே கண்டறிய முடியாத நிலை உருவாகியுள்ளது. போராட்டம் நடைபெறும் இடங்களில் பலரும் வீடியோ எடுத்து பதிவேற்றி ரீல்ஸ் செய்து வருகின்றனர்” என்றும் சுட்டிக்காட்டினார்.
எனினும், பெண் செய்தியாளர்கள் மீதான தாக்குதல் புகார்களை அரசு குறைத்து மதிப்பிடவில்லை என்றும், எந்த ஒரு பெண்ணும் தவறாக நடத்தப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல், இதற்காக ஒட்டுமொத்தமாகப் பொதுவான வழிகாட்டுதல்களை வழங்குவது சிக்கலானது என்று தெரிவித்தார். இதையடுத்து, மனுதாரர் தரப்பில் பெண் நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு கோரிய உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண் செய்தியாளருக்கு இடைக்கால பாதுகாப்பையும் வழங்கி உத்தரவிட்டது.
