LATEST NEWS
“இவ்வளவு கம்மியா…?!” மாதம் ரூ.646 இருந்தா போதும்… திருப்பதி முதல் சோமநாத் வரை போயிட்டு வரலாம்…! IRCTC ரயிலில் இப்படி ஒரு வசதியா..?!
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் தனது பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் நாட்டின் முக்கிய ஆன்மிகத் தலங்களுக்குச் செல்வதற்கான புதிய சுற்றுலாத் திட்டங்களை எளிய மாதாந்திர தவணை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முதலாவது சுற்றுலாத் தொகுப்பு, 11 இரவுகள் மற்றும் 12 நாட்கள் கொண்ட பயணமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில் திருப்பதி பாலாஜி கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கன்னியாகுமரி மற்றும் மல்லிகார்ஜுனா ஜோதிர்லிங்கம் ஆகிய ஆன்மிக இடங்களுக்குப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இத்திட்டத்தின் ஆரம்பக் கட்டணம் ரூ.23,560 ஆகும். இதனை பயணிகள் மாதம் ரூ.828 என்ற எளிய EMI தவணையிலும் செலுத்திக் கொள்ளலாம்.
இரண்டாவது சுற்றுலாத் தொகுப்பு, 9 இரவுகள் மற்றும் 10 நாட்கள் கொண்ட பயணமாக அமைைக்கப் பெற்றுள்ளது. இந்த யாத்திரையில் மாகாளேஸ்வரர், ஓங்காரேஸ்வரர், நாகேஸ்வரர் மற்றும் சோமநாத் ஆகிய நான்கு ஜோதிர்லிங்கத் தலங்களுடன் துவாரகாதீஷ், பேட் துவாரகை, சிக்னேச்சர் பாலம் மற்றும் புகழ்பெற்ற ஒற்றுமையின் சிலை ஆகியவற்றைக் கண்டு தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தொகுப்பின் ஆரம்ப விலை ரூ.18,380 ஆகும். இதைப் பயணிகள் மாதம் வெறும் ரூ.646 என்ற குறைந்த EMI முறையில் முன்பதிவு செய்யலாம்.
பயணிகளின் வசதிக்காக இந்த பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலில் ஏசி செகண்ட் கிளாஸ், ஏசி தேர்ட் கிளாஸ் மற்றும் ஸ்லீப்பர் கிளாஸ் ஆகிய மூன்று வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன் எல்டிசி மற்றும் இஎம்ஐ போன்ற சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்த யாத்திரையில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctctourism.com மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
