LATEST NEWS
“உலகை அச்சுறுத்தும் அடுத்த ஆபத்து..” 5,000 பேர் பலி… மருந்து இல்லாத கொடிய வைரஸ்… அதிர்ச்சியில் மக்கள்..!!
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மிகக் கொடூரமான முறையில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 5,000-ஐத் தாண்டியுள்ளது, இது உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அங்குள்ள 26 மாகாணங்களில் 8 மாகாணங்களுக்குத் தொற்று பரவியுள்ள நிலையில், இதுவரை 10,350-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைக்குப் பின் 2,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ள போதிலும், சிகிச்சை மையங்களுக்கு வெளியேயும் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாத மத்தியில் கண்டறியப்பட்ட இந்தத் தொற்றின் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து வருவதால், உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்நாட்டுக்குப் பயணத் தடையும் விதித்துள்ளன.
இந்த அதிவேகப் பரவலுக்கு ‘பண்டிபக்யோ’ என்ற அரிய வகை எபோலா வைரஸ் தான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த வைரஸ் பாதிப்புக்கு முறையான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது நோய் தடுப்பு மருந்துகளோ இல்லாததால், பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்திப் பராமரிப்பதே முதற்கட்ட சிகிச்சையாக உள்ளது. ஆரம்பத்தில் காங்கோவின் அண்டை நாடுகளான கென்யா, உகாண்டா போன்ற கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் பரவியிருந்த இந்தத் தொற்று, தற்போது மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உகாண்டாவிலிருந்து நைஜீரியாவுக்குப் பயணித்த அந்தப் பெண்ணுக்குப் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானதை அடுத்து, இந்த வைரஸ் பரவிய 4-வது நாடாக நைஜீரியா மாறியுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த 2014-2016 ஆண்டுகளில் கினியா, லைபீரியா உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்ட எபோலா பரவலின் போது 28,600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 11,000-க்கும் அதிகமானோர் பலியாகினர். அதற்குப் பிறகு மனித வரலாற்றில் ஏற்பட்டுள்ள இரண்டாவது மிகக் கொடிய எபோலா பரவலாகத் தற்போதைய பாதிப்பு பார்க்கப்படுகிறது. உடலின் உட்புற உறுப்புகளில் கடுமையான ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும் இந்த மிக ஆபத்தான வைரஸ், தெற்கு சூடான் உள்ளிட்ட பிற அண்டை நாடுகளுக்கும் பரவக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் தீவிர கவலை தெரிவித்துள்ளனர்.
