LATEST NEWS
திமுகவிற்கு புதிய நெருக்கடியா…? ஒரே மேடையில் விஜய் – திருமாவளவன்….! விசிக-வின் மாஸ்டர் பிளான்….!!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ டெல்லியில் நடைபெறும் தனது புத்தக வெளியீட்டு விழாவிற்குத் தமிழக முதலமைச்சர் விஜய்யை அழைத்துள்ளதைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவனும் அதே பாணியைப் பின்பற்றத் திட்டமிட்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விசிக சார்பில் பிரமாண்டமாக நடத்தப்படவுள்ள ‘தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டிற்கு’ முதலமைச்சர் விஜய்யை நேரில் அழைத்து வர விசிகவின் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். திமுக கூட்டணியிலிருந்து விலகி தற்போது தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ள சூழலில், முதலமைச்சரும் திருமாவளவனும் ஒரே மேடையில் தோன்றுவது டெல்லி மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் தங்களின் பலத்தைக் காட்டும் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், “விசிக இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது” என்று திருமாவளவன் அண்மைக் காலமாகப் பேசி வருவது தவெக தலைமை மற்றும் அதன் ஆலோசகர்களிடையே சில விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவின் அழுத்தத்தால் விஜய்யுடன் மேடையைப் பகிரும் வாய்ப்பைத் திருமாவளவன் தவிர்த்திருந்த நிலையில், தற்போது இந்த மாநாட்டின் மூலம் இருவரும் இணைவது திமுகவிற்கு ஒரு மறைமுக அரசியல் செய்தியாக அமையும் என விசிகவினர் நம்புகின்றனர். இந்த மாநாடு உறுதியாகும் பட்சத்தில், தவெக – விசிக கூட்டணி மேலும் வலுவடைவதோடு அரசியல் களம் புதிய திருப்பங்களைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
