LATEST NEWS
“சுடுகிறார்கள்… ஓடுங்கள்..!” உணவுத் திருவிழாவில் திடீர் துப்பாக்கிச் சூடு.. அலறியடித்து ஓடிய மக்கள்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
அமெரிக்காவின் சியாட்டல் சென்டரில் அமைந்துள்ள ஸ்பேஸ் நீடில் பகுதியில் நடைபெற்ற வார்ஷிக உணவுத் திருவிழா, நேற்று மாலை துயரத்தில் முடிந்தது. மாலை சுமார் 6 மணியளவில், அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் ஐந்து நபர்கள் உடனடியாக மீட்புக் குழுவினரால் ஹார்பர்வியூ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் 56 வயது பெண்மணியின் நிலைமை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும்; 2 வயது சிறுவன், 23 வயது இளைஞர், 29 வயது பெண் ஆகியோரின் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும் மற்றும் 40 வயது பெண்ணுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சியாட்டில் தீயணைப்புத்துறை செய்தித்தொடர்பாளர் கிரேஸ் நுனெஸ் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளதாகச் சியாட்டில் நகர மேயர் கேட்டி வில்சன் தெரிவித்துள்ளார். 1982-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெற்று, சுமார் 3,50,000 மக்கள் வரை பங்கேற்கும் இந்த மிகப்பெரிய உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு நடந்ததால், அங்கிருந்த மக்கள் பீதியடைந்து அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், இச்சம்பவம் குறித்துச் சியாட்டில் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
