CRIME
பகீர்..! “என் பொண்டாட்டிய கெடுக்குறதே இவ தான்” சாம்பலில் கிடந்த எலும்புகள், வளையல்கள்… காணாமல் போன தாயைத் தேடிய மகனுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… சிக்கிய கொடூர மருமகன்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் ஜித்னியா கிராமத்தில், மனைவி அடிக்கடி தாய் வீட்டிற்குச் செல்வதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மாமியாரைக் கொன்று உடலைத் தீவைத்து எரித்த மருமகனின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த 65 வயதான மோகன்தேய் என்ற முதியவரின் மகள் மீனா குமாரி, பக்கத்து ஊரைச் சேர்ந்த மகேந்திர பாலு என்பவரைத் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் மீனா குமாரி அடிக்கடி தனது தாய் வீட்டிற்குச் சென்று தங்குவதையும், வராத பட்சத்தில் தாய் போன் செய்து அழைப்பதையும் வழக்கமாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
மனைவியின் இந்தச் செயலால் அதிருப்தியடைந்த மகேந்திர பாலு, இது தொடர்பாகத் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக, மனைவியின் நடத்தைக்குக் காரணமான மாமியாரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். கடந்த ஜூலை 31ஆம் தேதி இரவு, மாமியார் மோகன்தேய் மட்டும் வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மகேந்திர பாலு, அவரை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், கொலையை மறைப்பதற்காக அவரது உடலை அருகிலிருந்த தொழுவத்தில் வைத்து தீவைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
வீட்டிற்குத் திரும்பிய மோகன்தேயின் மகன் சுரேஷ் குமார், தனது தாயைக் காணாமல் பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது வீட்டின் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சாம்பல் கிடப்பதைக் கண்டு தோண்டிப் பார்த்தபோது, அதற்குள் கருகிய மனித எலும்புகளும் வளையல்களும் கிடைத்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அளித்த புகாரின் பேரில், அமரியா போலீசார் வழக்குப் பதிவு செய்து தடயங்களைச் சேகரித்துள்ளனர். மீட்கப்பட்ட எலும்புகள் மோகன்தேயுடையதுதானா என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், தலைமறைவாக உள்ள கொடூர மருமகன் மகேந்திர பாலை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
