LATEST NEWS
ரூ. 85 லட்சம் நிதி எங்கே போனது..? உயிரைப் பணயம் வைத்து ஒரு இறுதி ஊர்வலம்… கர்நாடகா அதிகாரிகளின் அலட்சியத்தால் அரங்கேறிய அவலம்..!!
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் தவித்து வருகின்றன. குறிப்பாக, அம்மாநிலத்தின் கலபுரகி மாவட்டத்தில் உள்ள சேடம் தாலுகாவில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் சரண் பிரகாஷ் பாட்டீலின் சொந்தத் தொகுதியான சேடம் நகரின் முன்னாள் நகராட்சி உறுப்பினரும், மாடிகா சமூகத்தைச் சேர்ந்தவருமான ராஜு கலாகீகர் என்பவர் அண்மையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கிற்காக உடலை கமலாவதி ஆற்றின் அக்கரையில் அமைந்துள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால், கமலாவதி ஆற்றில் ஆபத்தான அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையிலும், அங்கு பாலம் இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி அவரது உடல் டிராக்டரில் ஏற்றப்பட்டு ஆர்ப்பரிக்கும் ஆற்றுக்குள்ளேயே ஆபத்தான முறையில் கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களும் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆற்று வெள்ளத்தைக் கடந்து சென்று இறுதிச் சடங்கைச் செய்து முடித்தனர். உயிருக்கு ஆபத்தான சூழலில் உடலை ஆற்று வழியே கொண்டு செல்லும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சேடம் நகர எல்லைக்குட்பட்ட கமலாவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில், கல்யாண கர்நாடக பிராந்திய மேம்பாட்டு வாரியம் ரூ.85 லட்சம் செலவில் பாலம் கட்ட ஒப்புதல் அளித்து, டெண்டர் நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளன. இருப்பினும், ஆற்றில் அதிக தண்ணீர் வருவதைக் காரணம் காட்டி அதிகாரிகள் பணிகளைத் தாமதப்படுத்தி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழைக்காலம் மட்டுமன்றி அனைத்துக் காலங்களிலும் அதிகாரிகள் காட்டும் அலட்சியப்போக்கினாலேயே ஆண்டுதோறும் இதுபோன்ற அவலநிலை தொடர்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
