LATEST NEWS
“அடச்சீ காபி குடிக்கப் போன இடத்தில் இப்படியொரு கேவலமா..?!” பில்லில் இருந்த வார்த்தையைப் பார்த்து நெஞ்சடைத்துப் போன வாடிக்கையாளர்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த சம்பவம்..!!
பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள ‘சப்கோ’ காபி ஷாப்பிற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவருக்கு, அவரது பெயருக்குப் பதிலாக உடலமைப்பைக் கேலி செய்யும் விதமாகப் பில் ரசீது வழங்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாடிக்கையாளர் காபி ஆர்டர் செய்துவிட்டுப் பில்லைச் சரிபார்த்தபோது, வாடிக்கையாளர் விபரங்கள் பகுதியில் அவரது பெயரோ அல்லது டேபிள் எண்ணோ குறிப்பிடப்படாமல், “குள்ளமான குண்டான கருப்பு சட்டை” எனத் தட்டச்சு செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஊழியரின் இந்த அநாகரிகமான ‘பாடி ஷேமிங்’ செயலை அந்த நபர் ரெடிட் சமூக வலைத்தளத்தில் புகைப்பட ஆதாரங்களுடன் பதிவிட்டதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அந்த காபி கடைக்கு எதிராகத் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கினர்.
இந்த விவகாரம் இணையத்தில் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, ‘சப்கோ’ காபி நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாடிக்கையாளரிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. எந்த வடிவத்தில் உருவக்கேலி செய்தாலும் அது மிகப்பெரிய தவறு என்றும், தங்களது ஊழியர் வேண்டுமென்றே அநாகரிகமான வார்த்தையைத் தட்டச்சு செய்து வாடிக்கையாளரின் கண்ணியத்தைக் குலைத்தது மிகவும் கொடூரமானது என்றும் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. தவறு செய்த ஊழியர் மீது உடனடியாக மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள காபி நிறுவனம், இனிவரும் காலங்களில் வாடிக்கையாளர்களின் விபரங்களைப் பதிவு செய்யும் போது இத்தகைய தனிநபர் வர்ணனைகளைப் பயன்படுத்தக் கூடாது எனத் தங்களது ஊழியர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளையும், புதிய பயிற்சி முறைகளையும் அமல்படுத்தியுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
