LATEST NEWS
“இதெல்லாம் சுத்த வேஸ்ட்ப்பா” ரேபிடோ ஓட்டிய கல்லூரி மாணவர்.. 3 மாத பகுதிநேர வேலையில் உணர்ந்த கசப்பான உண்மை.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு..!!
பெங்களூருவைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ மாணவர் ஒருவர், தனது செமஸ்டர் தேர்வு விடுமுறையில் 3 மாதங்கள் பகுதிநேர வேலையாக ‘ரேபிடோ’ பைக் ஓட்டிய அனுபவத்தை ரெடிட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் மே மாதத்தில் ₹5,660, ஜூன் மாதத்தில் ₹16,660 மற்றும் ஜூலையில் ₹13,222 வரை சம்பாதித்ததாக வருமான விவரங்களையும் வெளியிட்டுள்ளார். ஒரு நாளைக்குச் சராசரியாக ₹1,200 வரை சம்பாதித்தாலும், பெட்ரோல் செலவு ₹250 போக தினசரி ₹1,000 மட்டுமே கையில் மிஞ்சியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணம் சம்பாதிப்பதை விட, இந்தத் தொழிலைச் முழுநேர வாழ்வாதாரமாகக் கொண்ட ‘கிக் தொழிலாளர்களின்’ கசப்பான உண்மைகளை இந்த வேலை தனக்கு உணர்த்தியதாக அவர் கூறியுள்ளார். வாடிக்கையாளர்கள் சவாரியை ரத்து செய்தால், தவறு இல்லாவிட்டாலும் ஓட்டுநரின் ரேட்டிங் பாதிக்கப்படுவது மற்றும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து சரியான ஆதரவு கிடைக்காதது போன்ற அல்காரிதம் சிக்கல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சவாரி இல்லாத நேரத்தில் ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்தபோது, உணவகங்களில் 20-25 நிமிடங்கள் வரை காத்திருக்க நேரிட்டதாகவும் கூறியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாகப் பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்களிடம் இருந்து தனக்கு எந்த அச்சுறுத்தலும் வரவில்லை என்றும், பயணிகளுடன் நல்ல உரையாடல்கள் மட்டுமே அமைந்ததாகவும் மாணவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்த அனுபவத்தின் மூலம், பகுதிநேர வேலையாகச் செய்யும் தங்களைப் போன்றவர்களின் வாழ்க்கையும், இதையே முழுமையாக நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் முற்றிலும் மாறுபட்டது என்பதைப் புரிந்து கொண்டதாக அவர் தனது பதிவை முடித்துள்ளார்.
