LATEST NEWS
சேகர்பாபுவுக்கு பயம்… . அதனால்தான் அறநிலையத்துறையை அவர் வேவு பார்க்கிறார்..! அமைச்சர் ரமேஷ் விளாசல்..!!
சட்டசபையில் ஜனநாயகம் இருப்பதால் அனைவரின் குரல்களுக்கும் இடம் அளித்து வருவதாகவும், அதில் தேவையற்ற வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபுதான் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் ஜனநாயகம் இல்லாததால் அது போன்ற வார்த்தைகளை மக்கள் கேட்டிருக்க முடியாது எனக் கூறிய அவர், சட்டசபையில் சில முன்னாள் அமைச்சர்கள் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும், தங்களுக்கு மாண்பு உள்ளதால் எந்த தவறான வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசின் மீதும் முதலமைச்சரை நோக்கியும் கேள்வி வரும்போது மற்ற அமைச்சர்கள் அதற்குப் பதில் அளிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தன் மீது எந்தத் தவறும் இல்லை எனத் தொடர்ச்சியாகக் கூறி வந்தாலும், இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்பதை வேவு பார்த்து வருவதாக அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். தவறைத் துறை கண்டறிந்துவிடும் என்ற பயத்தின் காரணமாகவே அரசு என்ன செய்கிறது என்பதை அவர் வேவு பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றும், அந்த பயமே தங்களது ஆட்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி என்றும் தெரிவித்தார். கடந்த ஆட்சியில் விளம்பரத்திற்காக அறிவிக்கப்பட்டுத் தொடங்கப்படாத பன்னெடுக்கு கார் நிறுத்துமிடம் மற்றும் பக்தர்கள் தங்குவதற்கான சொகுசு விடுதி போன்ற திட்டங்களை ஆய்வு செய்து ரத்து செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவில்களில் நடைபெறும் தவறுகளைக் களைவதற்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறிய அவர், 100 நாளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்றும், தலைகீழாக மாற்றுவதற்கு அரசு ஒன்றும் சினிமா கிடையாது என்றும் கூறினார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள 50 முதுநிலை கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்லக் கூடாது என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாகவும், கோவிலுக்கு வெளியே செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குக் கட்டணம் வசூலிப்பது வழக்கமான நடைமுறைதான் என்பதால் மக்கள் அதனைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
