LATEST NEWS
கோவில்களுக்குள் இனி மொபைல் போனுக்கு நோ..! செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் அதிரடித் தடை..!!
திருச்சியில் உள்ள திருவரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறுகையில், நிர்வாக ரீதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு கோபுரம் திறப்பு இன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், முன்னோர்கள் கோவில்களுக்கு தர்ம காரியங்கள் செய்வதற்காக கொடுத்த நிலங்களின் நோக்கத்தை மறைத்து, அறநிலையத்துறையின் கவனத்திற்கு வராமல் சிலர் முறைகேடான பத்திரப்பதிவுகளில் ஈடுபடுவதாகவும், இதுகுறித்த தகவல்கள் கிடைத்தவுடன் நிர்வாக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசுையில், பழனியில் நீதிமன்றத்தை ஏமாற்றி ஆணை பெற்று இடத்தை பத்திரப்பதிவு செய்தது போன்ற சம்பவங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளை நிலத்தை தனி நபர்கள் பெயர் மாற்றம் செய்த வழக்கு தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தற்போதைய ஆட்சியில் கோவில் நில மோசடியில் ஈடுபட்ட 19 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
கோவில்களுக்குள் மொபைல்போன் தடை குறித்து தெரிவித்த அமைச்சர், ஏற்கனவே கோவில்களுக்குள் செல்போன்களை அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் அது கடைபிடிக்கப்படாமல் இருந்ததாகக் கூறினார். எனவே வரும் செப்டம்பர் 1-க்குள் அனைத்து முதல் நிலை கோவில்களிலும் மொபைல் போன்களை வைப்பதற்கான கவுண்டர்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பொதுமக்கள் கோவில்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்வது தடுத்து நிறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
