LATEST NEWS
“தமிழகத்திற்குத் தண்டனை… வட மாநிலங்களுக்குப் பரிசா…?” 50% உயர்வு என ஆசை காட்டி… மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவர முயற்சி… மாணிக்கம் தாகூர் சாடல்..!!
ஒன்றிய பா.ஜ.க. அரசு ‘மோடி-லிமிட்டேஷன்’ என்ற பெயரில் தொகுதி மறுவரையறை மசோதாவை, 50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஏப்ரல் 17 அன்று ‘இந்தியா’ கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதா, இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கும் மிகப்பெரிய அரசியல் சதி என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த 50% உயர்வு அமலுக்கு வந்தால் உத்தரப் பிரதேசத்தின் தொகுதிகள் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாட்டின் தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான தொகுதி இடைவெளி 41-ல் இருந்து 61 ஆக விரிவடைந்து, நாடாளுமன்றத்தில் தென்னக மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் இதைச் செய்தால் பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 9 அன்று நடைபெறவுள்ள ‘QUIT UNFAIR DELIMITATION MARCH’ பேரணி என்பது தமிழ்நாட்டின் அரசியல் இறையாண்மை, ஜனநாயக உரிமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் அதிகாரப் பாதுகாப்பிற்காக நடத்தப்படும் உரிமைப் போராட்டமாகும் என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். மேலும், இந்த அநீதியான தொகுதி மறுவரையறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘Unfair Delimitation’ பாடலை உருவாக்கிய தம்பி சலாம் மாஸ் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்த அவர், தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
