CRIME
அடப்பாவமே..! சொந்த ஊருக்குப் போன நேரம் பார்த்து கைவரிசை… 45 பவுன் நகையை கொள்ளையடித்து குடும்பத்தோடு மாட்டிய வாலிபர்..!!
திருப்பூரில் மளிகை கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், பக்கத்து வீட்டில் வசித்த வாலிபர், அவரது தாய், தங்கை உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட அருண்ராஜ் என்பவர் திருப்பூர் கல்லூரி சாலை, மாஸ்கோ நகர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த அக்டோபர் 18-ந் தேதி தசரா பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு கடந்த 23-ந் தேதி திரும்பியபோது, வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் நகைகளும், ரூ.1 லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அருண்ராஜ் வீட்டின் அருகிலேயே குடும்பத்துடன் வசித்து வந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (வயது 24) என்பவரின் நடமாட்டம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரிடம் விசாரணை நடத்தியதில், அருண்ராஜ் ஊருக்குச் சென்றதை நோட்டமிட்ட விஜய், தனது நண்பர்களான அப்துல் ரசாக் மற்றும் மவுலானா யூசுப் ஆகியோருடன் இணைந்து நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து நகையையும், பணத்தையும் சுருட்டியது அம்பலமானது. மேலும், கொள்ளையடித்த 45 பவுன் நகைகளை விஜய் அப்படியே வைத்திருக்காமல், தனது தாயார் அமராவதி, தங்கை சரண்யா மற்றும் தங்கையின் கணவர் ஆனந்த் ஆகியோரின் உதவியுடன் பல்வேறு கடைகளில் விற்று பணமாக்கியுள்ளார். இந்த கொள்ளை சம்பவத்திற்கு விஜய்யின் குடும்பத்தினர் முழுமையாக உடந்தையாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக விஜய், அவரது தாயார் அமராவதி, தங்கை சரண்யா, மாமனார் ஆனந்த் மற்றும் கொள்ளைக்கு உதவிய நண்பர் அப்துல் ரசாக் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடைகளில் விற்கப்பட்ட 13 பவுன் நகைகள் முதற்கட்டமாக மீட்கப்பட்டன. பிடிபட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்றொரு முக்கிய குற்றவாளியான மவுலானா யூசுப், ஏற்கனவே வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவரிடம்தான் மீதமுள்ள நகைகளும், பணமும் இருப்பதாக தெரிவித்துள்ள போலீசார், அவரை காவலில் எடுத்து விசாரிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
