CRIME
“அவள் தற்கொலை செய்துகொண்டாள்..” நள்ளிரவு 2 மணிக்கு வந்த போன் கால்.. வாடகை வீட்டில் கட்டிலில் கிடந்த பெண்ணின் சடலம்.. அம்பலமாகும் பகீர் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் பெலகாவி நகரின் ஆனந்த் நகர் பகுதியில், கணவர் வேலைக்காக வெளிநாட்டில் இருக்கும் சூழலில், பூனம் அமித் தேலேகர் (33) என்ற இல்லத்தரசி வாடகை வீட்டில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூனமின் கணவர் குவைத்தில் பணியாற்றி வரும் நிலையில், பெலகாவியில் உள்ள தனியார் அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து வந்த பூனமிற்கு, ரஞ்சன் மார்வே என்பவருடன் கடந்த சில ஆண்டுகளாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பின் காரணமாகத் தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறிய பூனம், தனியாக வாடகை வீடு எடுத்துத் தங்கியிருந்துள்ளார். கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில், ரஞ்சன் மார்வே பூனமின் குடும்பத்தினரைத் தொலைபேசியில் அழைத்து, பூனம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளார். ஆனால், பதறியடித்துக்கொண்டு குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, பூனமின் சடலம் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்ததால் மரணத்தில் கடுமையான சந்தேகம் எழுந்துள்ளது.
பூனம் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், ரஞ்சன் மார்வே அவளைக் கொலை செய்துவிட்டுத் தற்கொலை போல நாடகமாடுகிறார் என்றும் உறவினர்கள் ஷாகாபூர் காவல் நிலையத்தில் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும், பூனம் தங்கியிருந்த வீட்டின் சமையலறையில் மது பாட்டில் ஒன்று கண்டெடுக்கப்பட்டதால், அன்றைய தினம் வீட்டில் ஏதேனும் பார்ட்டி நடந்ததா, அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை அரங்கேறியதா என்ற கேள்விகளை அவர்கள் எழுப்பியுள்ளனர். தற்போது பூனமின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பிஐஎம்எஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஷாகாபூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மொபைல் போன் அழைப்பு விவரங்கள் மற்றும் சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
