CRIME
நெஞ்சை உலுக்கும் பயங்கரம்.. தாயின் கள்ளக்காதலால் 2.5 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூர முடிவு.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி இரண்டரை வயதுப் பெண் குழந்தையைத் தாயின் உறவினரே ஓடையில் வீசிக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டரை வயதுச் சிறுமி, தனது தாயுடன் முஃபசில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நர்சந்தா கிராமத்தில் வசித்து வரும் உறவினரான (தாயின் அத்தை மகன்) சமீர் பான் என்பவரது வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்குச் சிறுமியின் தாய்க்கும் சமீர் பானுக்கும் இடையே திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்ததாகவும், இருவரும் வேறு இடத்திற்குச் சென்று ஒன்றாக வாழத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் குழந்தை தங்களது உறவுக்கு இடையூறாக இருக்கும் என்று கருதிய சமீர் பான், கடந்த நவம்பர் 11-ஆம் தேதி குழந்தையை ஏதோ ஒரு காரணம் கூறி வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்று, அருகிலிருந்த ஓடையில் தள்ளிவிட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இதனிடையே, குழந்தை மாயமானது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விசாரணையின் போது, குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வந்ததாகக் கூறி சமீர் பான் போலீசாரைத் திசைதிருப்ப முயன்றார். இருப்பினும், அவரது முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த போலீசார், வெள்ளிக்கிழமையன்று அவரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தியதில் குழந்தையை ஓடையில் தள்ளிக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, காணாமல் போன மூன்று நாட்களுக்குப் பிறகு கிராமத்திற்கு அருகிலுள்ள வடிகால் பகுதியில் இருந்து சிறுமியின் சடலத்தை மீட்ட காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலையாளி சமீர் பானைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.
