LATEST NEWS
இதுதாங்க எங்க நாடு..? “ஜெர்மனியில் ஒரு மாசம் ஆகும்; ஆனா இந்தியாவில் உடனே ஃப்ரீ!” இந்திய அரசு மருத்துவமனையைப் பார்த்து மிரண்டுபோன வெளிநாட்டுப் பயணி…!
உலகம் முழுவதும் சுற்றி வரும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டேவிட் நெபில் என்ற பயணி, குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தனக்குக் கிடைத்த இலவச மற்றும் விரைவான மருத்துவச் சிகிச்சையைக் கண்டு வியந்து பாராட்டியுள்ளார். இந்தியாவில் தமக்கு மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான இரத்தப் பரிசோதனைகளும், தோல் மருத்துவருடனான ஆலோசனையும் எவ்வித கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாகச் செய்யப்பட்டன என்று அவர் தெரிவித்துள்ளார். தான் ஒரு வெளிநாட்டவராக இருந்தபோதிலும், தனக்குக் கிடைத்த இந்த தடையற்ற மருத்துவச் சேவை குறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைப் பாராட்டிய டேவிட், தனது சொந்த நாடான ஜெர்மனியில் இத்தகைய மருத்துவப் பரிசோதனைகளைச் செய்வதற்கு என்னென்ன நடைமுறைகள் உள்ளன என்பதை ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். ஜெர்மனியில் இதுபோன்ற சாதாரண இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு மருத்துவரைச் சந்திக்க அனுமதி பெறவே குறைந்தது ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தியாவில் மிகக் குறுகிய நேரத்தில் எந்தவொரு காத்திருப்பும் இன்றி உடனடியாகத் தனக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
டேவிட்டிற்கு இந்திய மருத்துவமனைகளில் இத்தகைய சிறப்பான அனுபவம் கிடைப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஏப்ரல் மாதத்தில் இவரை நாய் கடித்தபோதும், அரசு மருத்துவமனையிலேயே இவருக்கு ரேபிஸ் தடுப்பூசியும் இலவசமாகப் போடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவக் கட்டமைப்பின் மீதான தனது மதிப்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் விதமாக, “இந்திய சுகாதாரத் துறைக்கு எனது சல்யூட்” என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ, இந்திய அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மற்றும் உலகளாவிய மருத்துவச் சேவைத் தரம் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பெரும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.
