LATEST NEWS
“அம்மா காப்பாத்துங்க” ஒரே அலறல் சத்தம்.. பயங்கர வெடிச்சத்தத்துடன் நடுவழியில் நின்ற லிப்ட்… 15 நிமிடம் உயிருக்குப் போராடிய 8 வயது சிறுமி…. நெஞ்சை பதறவைக்கும் விபத்து..!!
உத்தரப் பிரதேசம் மொராதாபாத்தில் உள்ள கிரீன் ஆர்கிட் சொசைட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய 4-ஆம் வகுப்பு பயிலும் கீர்த்தி சுக்லா என்ற 8 வயது சிறுமி, மின் தூக்கியில் மாட்டிக்கொண்டு சுமார் 15 நிமிடங்கள் உயிருக்குப் போராடிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அச்சிறுமி தனது தம்பியுடன் பள்ளி முடிந்து வந்துள்ளார். தம்பி படிக்கட்டுகள் வழியாக மேலே செல்ல, சிறுமி லிப்ட்டைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், லிப்ட் இரண்டாவது தளத்தை நெருங்கியபோது ஒரு பயங்கர வெடிச்சத்தத்துடன் திடீரென நடுவழியில் நின்றுபோனதுடன், அதன் கனமான கதவுகளும் தானாகப் பூட்டிக்கொண்டன.
மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளே இருள் சூழ்ந்ததாலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாலும் பயந்துபோன சிறுமி, காப்பாற்றுமாறு சத்தமிட்டு அழுதுள்ளார். படிக்கட்டு வழியே சென்ற தம்பி இதைக் கேட்டு உடனடியாகப் பெற்றோரிடம் கூற, அவர்கள் பாதுகாவலரை அழைத்துக் கொண்டு ஓடிவந்துள்ளனர். ஆனால், கடுமையான தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சாவியைப் பயன்படுத்தியும் லிப்ட் கதவைத் திறக்க முடியாமல் போனதால் அங்குப் பெரும் பதற்றம் நிலவியது.
இதையடுத்து சமயோசிதமாகச் செயல்பட்ட பாதுகாவலர், கதவின் உட்புற விளிம்புகளைப் பிடித்துத் தனது முழு பலத்தையும் கொண்டு வெளிநோக்கி இழுக்குமாறு அச்சிறுமிக்கு தைரியம் கூறி அறிவுறுத்தினார். அச்சிறுமி பயத்திற்கு மத்தியிலும் உள்ளே இருந்து கதவை இழுக்க, 15 நிமிடக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கதவு சற்றுத் திறக்கப்பட்டுச் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாள். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கட்டுமான நிறுவனம் மற்றும் பராமரிப்புக் குழுவினரின் அலட்சியப் போக்கைக் கண்டித்துக் குடியிருப்போர் சங்கத்தினர் கடும் கொந்தளிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
