LATEST NEWS
“இது கேவலத்தின் உச்சம்… ரீல்ஸ் அரசு..!” மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் த.வெ.க அரசை வெளுத்து வாங்கிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்..!!
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், தமக்கு உதவித்தொகை வழங்காமல் தற்போதைய அரசு இழுத்தடிப்பதைக் கண்டித்துக் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றியிருக்கும் த.வெ.க. அரசை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், உதவித்தொகை கிடைக்கவில்லை என்று குரல் எழுப்பிய மாணவரைக் குறிவைத்து நெருக்கடி தருவதும், அவரை கல்வியில் இருந்து வெளியேற்றத் துடிப்பதும் கேவலத்தின் உச்சம் என்றும் அவர் சாடியுள்ளார்.
ரோஹித் வெமுலாவுக்கு நேர்ந்த அதே கொடுமை தனக்கும் நடப்பதாக மாணவர் பாரதிதாசன் மனம் நொந்து பேசியிருப்பதைச் சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், அரசியல் பழிவாங்கலுக்காக அம்மாணவரின் கல்வியைப் பாழாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார். மாணவர் பாரதிதாசனின் கல்விக்கு இந்த அரசு எந்தவொரு இடையூறும் செய்யக் கூடாது என எச்சரித்துள்ள அவர், அவருக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகை உடனடியாகக் கிடைக்கவும், அவரது ஆராய்ச்சி படிப்பு தொய்வின்றித் தொடரவும் இந்த ‘ரீல்ஸ்’ அரசு உரிய நடவடிக்கை எடுத்துத் துணை நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
