“எங்களுக்கு அட்வைஸ் பண்ண யாருக்கும் தகுதியில்லை..!” த.வெ.க.வுக்கு துரைமுருகன் அதிரடி பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்களுக்கு அட்வைஸ் பண்ண யாருக்கும் தகுதியில்லை..!” த.வெ.க.வுக்கு துரைமுருகன் அதிரடி பதிலடி..!!

Published

on

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயமான தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நலனும் பிரதிநிதித்துவமும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் திமுக தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் தடுமாற்றமும் இல்லை என்றும், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா பற்றி எதுவும் இடம்பெறாத நிலையில், திமுகவுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், முறையற்ற தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் ஆபத்து குறித்து முதன்முதலில் குரல் கொடுத்து, தேசிய அளவில் மாநிலங்களை ஒன்றிணைத்தது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

வருகின்ற ஆகஸ்ட் 8 அன்று தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ள எம்பிக்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று திமுகவின் கருத்தைப் பதிவு செய்வதில் எந்தத் தயக்கமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள துரைமுருகன், அதற்கென ஒரு நிபந்தனையையும் முன்வைத்துள்ளார். கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்கவும், தமிழ்நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அதற்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும். புதுக் கூட்டாளியான காங்கிரசின் மனம் புண்படும் என்பதற்காக மேகதாது விவகாரத்தில் கள்ள மவுனம் காத்துக்கொண்டு, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டால் அதைத் தடுக்கும் முன்னணிப் படையாக திமுக இருக்கும் என உறுதி அளித்துள்ள துரைமுருகன், அதேநேரத்தில் காவிரி உரிமையை மீட்பதும் மேகதாது அணையைத் தடுப்பதும் தற்போதைய சூழலில் மிகவும் அவசியமானது என்று வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்த வேண்டிய அவசிய அவசரமான இந்த நேரத்தில், த.வெ.க. அரசு ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக, தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க தமிழகத்தின் அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in