LATEST NEWS
“என்னது.. ரேஷன் கடையில் வெங்காயமா..?!” செப்டம்பர் 3 முதல் கிலோ ரூ.35-க்கு விற்பனை..! சட்டசபையில் அமைச்சர் வெங்கடரமனன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விலை கண்காணிப்பு குழு கூட்டத்தின் தொடர்ச்சியாக, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தத் தொடர்ந்து ஆய்வு மற்றும் கண்காணிப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டது. ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை உயர்ந்து போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்ததால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும், வெங்காய உற்பத்தி அதிகம் கொண்ட மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததன் காரணமாக, வெளிச்சந்தையில் 1 கிலோ வெங்காயம் ரூ.56 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை ஏற்றத்தைக் குறைக்கும் வகையில் உணவப் பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமனன் சட்டசபையில் பேசுகையில், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வெங்காய விலையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதற்காக தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு நியாயமான முறையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக, நகர்ப்புறப் பகுதிகளில் 1 கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், பிரதான விற்பனைப் பண்டகசாலைகள், அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புற நியாய விலை கடைகள் மூலம் இது விநியோகிக்கப்படும். அதன்படி, நகர்ப்புறங்களில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், 8,739 நியாய விலை கடைகளில் வரும் 3-ஆம் தேதி முதல் 1 கிலோ வெங்காயம் மலிவு விலையில் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
