LATEST NEWS
காதலிச்ச பாவத்துக்கு இதுதான் தண்டனையா..? அழகெல்லாம் போச்சு… 12 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே… பாகிஸ்தான் கணவரின் கொடூரம்… நரக வேதனையை அனுபவித்த பிரெஞ்சு பெண்… தாயை காப்பாற்றிய மகன்..!!
பிரான்ஸைச் சேர்ந்த சில்வி யஸ்மினா என்ற 54 வயது பெண்மணி, பாகிஸ்தானில் தனது கணவரால் 12 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, சமீபத்தில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் வசித்தபோது ஒரு பாகிஸ்தானிய நபரை காதலித்து திருமணம் செய்துகொண்ட சில்வி, கடந்த 2014-ஆம் ஆண்டு அவரோடு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்திற்கு குடியேறினார். ஆனால், அங்கு சென்ற சில காலத்திலேயே அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் சில்வியை ஒரு பாழடைந்த மண் வீட்டில் அடைத்து வைத்து, வெளிஉலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் சித்திரவதை செய்யத் தொடங்கினர்.
கடந்த 12 ஆண்டுகளாக மொபைல் போன், இணையம் அல்லது உறவினர்கள் என யாருடனும் பேச சில்வி அனுமதிக்கப்படவில்லை. இந்த கொடூர சிறைவாசத்தின் போது சில்விக்கு ஐந்து குழந்தைகள் பிறந்த நிலையில், அவர்களுக்கு அடிப்படை கல்வியோ அல்லது சமூக வாழ்க்கையோ வழங்கப்படாமல் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே வளர்க்கப்பட்டனர். மேலும், சில்வி மற்றும் அவரது குழந்தைகள் தினமும் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, அவர்களின் உடல்களில் பல காயங்களுடன் நரக வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
சமீபத்தில், சில்வியின் மூத்த மகன் ஒருவன் காவலாளிகளின் கண்களில் படாமல் வீட்டை விட்டு தப்பி ஓடி, அருகில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்து தங்களின் அவல நிலையை விவரித்தான். உடனடியாக களமிறங்கிய பாகிஸ்தான் போலீஸார், அந்த பாழடைந்த வீட்டை அதிரடியாக சோதனையிட்டு சில்வி மற்றும் அவரது ஐந்து குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். தற்போது சில்வியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்; பிரெஞ்சு தூதரகத்தின் உதவியுடன் சில்வியையும் அவரது குழந்தைகளையும் மீண்டும் பிரான்சுக்கு அனுப்பும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
