LATEST NEWS
அதிகாரி ஓகே சொன்னாலும் அவங்க கேட்கல…!சார்பதிவாளர் அலுவலக வாசலில் அமர்ந்து ஏழைப் பெண் தர்ணா…!டிவியில் வந்த செய்தி… அடுத்த நிமிடமே எக்ஸ் (X) தளத்தில் இறங்கிய அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்…! வாணியம்பாடியில் நடந்தது என்ன…!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில், கூலி தொழிலாளி ஈஸ்வரி என்பவர் தனது இடத்தை மீண்டும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகச் செல்பவர்களின் ஆவணங்களை ஊழியர்கள் நிலுவையில் வைத்து அலைக்கழிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் உச்சகட்டமாக, ஈஸ்வரி சார்பதிவாளர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இச்செய்தி உடனடியாக தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வனின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அவர் இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்ததோடு, எக்ஸ் (X) தளத்தில் விரிவான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஈஸ்வரி (45) வாணியம்பாடி அடுத்த பத்தாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவருக்குச் சொந்தமான 1,300 சதுர அடி நிலத்தை கடந்த 2023-ஆம் ஆண்டு வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். தற்போது அதே நபரிடம் வாங்கிய தொகையைத் திரும்பக் கொடுத்துவிட்டு, அந்த இடத்தை மீண்டும் தனது பெயருக்கே பத்திரம் செய்வதற்காக கடந்த வாரம் சார்பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளார். ஆனால், ஆவணங்களில் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கூறி அங்கிருந்த கணினி ஆபரேட்டர் மற்றும் தலைமை எழுத்தர் (Head Clerk) ஆகியோர் தன்னை இரண்டு வாரங்களாக அலைக்கழிப்பதாக ஈஸ்வரி குற்றம் சாட்டினார். சார்பதிவாளர் சம்மதித்தாலும் கீழ்நிலை ஊழியர்கள் முட்டுக்கட்டை போடுவதாக உயர் அதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள விளக்கத்தில், கடந்த மே 21 அன்று ஈஸ்வரி தற்காலிகப் பதிவு எண்ணின் கீழ் வாணியம்பாடி கிராமத்தில் உள்ள சொத்து தொடர்பான ஆவணத்தைச் சமர்ப்பித்ததை உறுதிப்படுத்தியுள்ளார். அந்தச் சொத்தின் முந்தைய உரிமைப் பத்திரத்தை (ஆவண எண் 5876/2023) ஆய்வு செய்ததில், அது ஏ. மதன் குமார் என்பவரால் சி. கார்த்திகேயனுக்கு விற்கப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆனால், அந்த மூல ஆவணத்தின் சொத்து விவரங்களில் சர்வே எண் பிழை இருந்தது கண்டறியப்பட்டது. அதில், 690 சதுர அடி பரப்பளவுள்ள இரண்டு சொத்துக்கள் விற்கப்பட்டதாகத் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்ததே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என்று அமைச்சர் விளக்கியுள்ளார்.
உண்மையில் அது 690 சதுர அடி பரப்பளவுள்ள ஒரே ஒரு நிலத் துண்டு மட்டுமே என்பதால், சட்ட விதிகளின்படி சார்பதிவாளர் அவரிடம் திருத்தப் பத்திரம் (Rectification Deed) சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார். இருப்பினும், ஏழைத் தொழிலாளியின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, திருமதி ஈஸ்வரி அவர்களுக்குத் தேவையான உரிய ஆலோசனைகளை வழங்கி, தேவையான ஆவணங்களை முறைப்படுத்தி அவரது பத்திரப்பதிவை விரைவாக நிறைவு செய்து தருமாறு அரசு அதிகாரிகளுக்குத் தான் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி, தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு என்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்றும் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தனது பதிவில் உறுதிபடக் கூறியுள்ளார்.
