LATEST NEWS
“உங்களுக்கு அவமானம் ஏற்பட்டால் தமிழகமே வெகுண்டெழும்!” – கர்நாடகா சென்று பேச முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா அதிரடி கோரிக்கை..!
காவிரி நீர் பிரச்னை தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சருடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மேகேதாட்டு அணை விவகாரம் மற்றும் தமிழகத்திற்கான தண்ணீர் உரிமை குறித்துப் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் கர்நாடகாவுக்குச் சென்று பேசத் தயங்கக் கூடாது என்றும், அங்கு அவமரியாதை ஏற்படும் என அஞ்சத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், தமிழக மக்களின் நலனுக்காகச் செல்லும் முதலமைச்சருக்கு அங்கு ஏதேனும் அவமானம் நேர்ந்தால், ஒட்டுமொத்த தமிழகமே அதற்கு எதிராக வெகுண்டெழும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்
இரு மாநிலங்களிலும் புதிய முதலமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள சூழலில், காவிரி விவகாரத்திற்குச் சுமூகத் தீர்வு காண இரு தரப்பும் நேரில் சந்திப்பது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார். கர்நாடகாவில் உள்ள கோயில்களுக்குச் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்குள்ள அரசிடம் பேசி தமிழகத்திற்குரிய தண்ணீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேமுதிகவின் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்காகச் சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதலமைச்சர் ஆலோசிக்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
