CINEMA
“மொழிப்பற்று இருக்கிறதே தவிர மொழிவெறி இல்லை..” இணையத்தில் வெடித்த சர்ச்சைகளுக்குப் பதிலடி கொடுத்த சாய் பல்லவி…!
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சாய் பல்லவி குறித்து சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் காட்டுத்தீ போலப் பரவியது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில், அவர் மலையாளி என்று குறிப்பிடப்பட்டபோது, அதற்கு அவர் மிகவும் கோபமடைந்து “நான் மலையாளி கிடையாது, என்று பதிலளித்ததாகச் செய்திகள் திரித்து வெளியிடப்பட்டன. சாய் பல்லவி மலையாள மொழியை அவமதித்துவிட்டதாகக் கூறி மலையாள ரசிகர்கள் மத்தியில் இது தேவையற்ற விவாதங்களை உருவாக்கியது.
இந்த விவகாரம் குறித்து மனம் திறந்துள்ள சாய் பல்லவி, பழைய வீடியோ ஒன்று தவறான புரிதலுடன் மீண்டும் பரப்பப்படுவதைக் கண்டு தான் மிகுந்த மனவேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். “நான் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் என்பதை ஒரு தகவலாக மட்டுமே பதிவு செய்தேன். அதில் எந்தக் கோபமும் இல்லை. மலையாளத் திரையுலகம்தான் எனக்கு ‘பிரேமம்’ படத்தின் மூலம் மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. அப்படி இருக்கும்போது அந்த மொழியையோ அல்லது மக்களையோ நான் ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டேன்” என்று அவர் உருக்கமாக விளக்கம் அளித்துள்ளார்.
தன்னைப் பற்றிச் சொல்லப்படாத விஷயங்களைச் சொன்னதாகச் சித்திரிக்கப்படுவது மிகுந்த மன அழுத்தத்தைத் தருவதாகக் குறிப்பிட்ட அவர், மொழி ரீதியான பாகுபாடுகள் தனக்குக் கிடையாது என்றும் கூறியுள்ளார். தான் ஒரு மருத்துவர் என்பதால் அனைத்து உயிர்களையும் மொழிகளையும் சமமாகவே மதிப்பதாகவும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சாதாரண உரையாடலைத் தற்போது வதந்தியாகப் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் கடந்த சில நாட்களாக இணையத்தில் நீடித்து வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
