LATEST NEWS
“மக்களின் குருதியை உறிஞ்சும் கொடுஞ்செயல்…” சமையல் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராகச் சீமான் அனல் பறக்கும் அறிக்கை….!!
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு 29 ரூபாய் உயர்த்தியிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எவ்வித முன்னறிவிப்புமின்றி செய்யப்பட்டுள்ள இந்த விலையேற்றம் ஏழை, எளிய மக்களை வதைக்கும் கொடுங்கோன்மை என்று அவர் சாடியுள்ளார். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில், சிலிண்டர் விலையையும் கூட்டுவது சாமானிய குடும்பங்களை வஞ்சிக்கும் செயலாகும் என்றும், கடந்த தேர்தலுக்காகக் குறைக்கப்பட்ட விலையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்ல மத்திய பா.ஜ.க. அரசு முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எரிபொருட்களின் விலை நிர்ணய உரிமையைக் கடந்த 2010-ல் காங்கிரசும், 2014-ல் பா.ஜ.க-வும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்ததே தற்போதைய துயரங்களுக்குக் காரணம் என்று குறிப்பிட்ட சீமான், இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும், விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் அரசே தன் கையில் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த இக்கட்டான சூழலில் தமிழக மக்களைக் காக்க, தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்துக் குடும்பங்களுக்கும் வருடத்திற்கு 6 சிலிண்டர்களுக்கான முழுச் செலவையும் உடனடியாக ஏற்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
