LATEST NEWS
“பா.ஜ.க – த.வெ.க கூட்டணிக்கு தூது போன வைகோ… மல்லை சத்யா போட்டு உடைந்த ரகசியம்.. அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு”..!!
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிட வெற்றிக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மல்லை சத்யா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் த.வெ.க அரசு ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மதிமுக தற்போது ஒரு திரிபுவாத இயக்கமாக மாறி, வாரிசு அரசியலுக்காகத் தங்கள் மீது துரோகப் பழியைச் சுமத்துவதாகக் குற்றம் சாட்டிய அவர், வைகோவும் துரை வைகோவும் விஜய்யின் ரசிகர் மன்றத் தலைவர்கள் போலச் செயல்பட்டு, பா.ஜ.க – த.வெ.க கூட்டணியை இணைப்பதற்கான இடைத்தரகர் பணியைச் செய்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி திருச்சியில் பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் திராவிட இயக்க தீரர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளதாகவும், இம்மாதத்தில் தங்கள் கட்சிப் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
2026 தேர்தல் முடிவுகள் அரசியலில் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட மல்லை சத்யா, சிறப்பான திட்டங்களை நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்றோரின் தோல்வி அதிர்ச்சியளிப்பதாகவும், மக்கள் தங்கத்திற்கு நிகராக இரும்பை எடை போட்டுள்ளார்கள் என்றும் சாடினார். தற்போதைய த.வெ.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதோடு, அரசை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவது ஜனநாயகப் பாதையிலிருந்து பாசிசப் பாதைக்கு அரசு செல்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாகக் கூறினார். தொண்டர்கள் மீது அக்கறையின்றி வாரிசு அரசியலை முன்னிறுத்தும் மதிமுக, காலப்போக்கில் காணாமல் போன வரலாற்றுச் சின்ன கட்சிகளைப் போல விரைவில் கரைந்து போகும் என்றும் அவர் எச்சரித்தார்.
