LATEST NEWS
“என்னை மிரட்ட பார்க்கிறார்கள்..!” நடுவானில் உக்ரைன் அதிபருக்கு நேர்ந்த அச்சுறுத்தல்.. விமானத்தை குறிவைத்த ரஷ்யா.. உலகையே உலுக்கிய பரபரப்பு சம்பவம்..!!
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பிற சர்வதேச தலைவர்களை அச்சுறுத்தும் நோக்கில், கடந்த சில வாரங்களில் ரஷ்யா தனது விமானத்தை இருமுறை ட்ரோன்கள் மூலம் தாக்க முயன்றதாக அதிபர் ஜெலென்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சி.பி.எஸ். நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இத்தகவலைப் பகிர்ந்த அவர், முதல் சம்பவத்தின் போது தனது விமானம் மால்டோவாவில் இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து சிசினாவ் வழியாகத் தாயகம் திரும்பியபோதும் ரஷ்யா இதேபோன்ற தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் அதிபரின் தூதுக்குழுவினர் அனைவரும் இந்த ஆபத்தான சூழலில் இருந்து பாதுகாப்பாக தப்பியதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் மட்டுமின்றி, உக்ரைனில் பயணம் செய்த மூத்த ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் சி.ஐ.ஏ. முன்னாள் இயக்குநர் டேவிட் பெட்ரேயஸ் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் சென்ற பயணிகள் ரயில் மீதும் ரஷ்யா அண்மையில் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் போலந்து எல்லைக்கு அருகே அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சர்வதேச தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவே ரஷ்யா திட்டமிட்டு இத்தகைய தொடர் தாக்குதல் உத்திகளைக் கையாளுவதாக ஜெலென்ஸ்கி அழுத்தமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
