CINEMA
“கண்ணீரை மறைத்துக்கொண்டு சிரித்த திரையுலக ஜாம்பவான்…!”ஊர்வசிக்கு நடந்த சோகம்…!”சொந்த அண்ணனின் இறுதிச்சடங்கு…! அடுத்த நாளே காமெடி காட்சியில் நடிப்பு…!
இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் ஊர்வசி, ஜெயராம், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பரிமளா அண்ட் கோ’. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் ஜி. தமிழ்குமரன் தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் மே 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படத்தின் கதாநாயகன் ஜெயராம் மற்றும் ஊர்வசி இருவரும் இணைந்து பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து படPromotion பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான மற்றும் மனதை உருக்கும் சம்பவத்தை நடிகர் ஜெயராம் பகிர்ந்துள்ளார். இப்படத்திற்காக பாலக்காட்டில் அனைத்து முக்கிய நடிகர்களும் பங்கேற்கும் ஒரு முக்கியமான நகைச்சுவைக் காட்சி திட்டமிடப்பட்டிருந்தது. அந்த குறிப்பிட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்த வெறும் நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததால், அந்த தேதியை தவறவிட்டால் மீண்டும் படப்பிடிப்பை நடத்த முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை படக்குழுவுக்கு இருந்தது. இதனால் மிகுந்த திட்டமிடலுடன் ஒட்டுமொத்த படக்குழுவும் பாலக்காடு சென்று முதலாம் நாள் படப்பிடிப்பைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, ஊர்வசியின் அண்ணன் காலமானார் என்ற அதிர்ச்சி செய்தி வந்து சேர்ந்தது.
இந்தத் துயரமான சூழலிலும் தனது தனிப்பட்ட இழப்பை விடவும் தயாரிப்பாளரின் நஷ்டத்தையும், சக கலைஞர்களின் நேரத்தையும் பெரிதாகக் கருதிய ஊர்வசி, அசாத்திய தொழில்பக்தியை வெளிப்படுத்தியுள்ளார். அன்றைய தினமே சென்னைக்குச் சென்று அண்ணனின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, அடுத்த நாள் மதியமே மீண்டும் பாலக்காடு படப்பிடிப்பு தளத்திற்குத் திரும்பியுள்ளார். அதுவும் அவர் நடிக்க வேண்டியது அச்சு அசலான ஒரு முழுநீள நகைச்சுவைக் காட்சி என்பதால், தன் மனதில் இருந்த அத்தனை சோகங்களையும் மறைத்துக்கொண்டு, கேமரா முன்னால் சிரித்துச் சிரித்து நடித்துக் கொடுத்துள்ளார் என்று ஜெயராம் வியப்புடன் ஊர்வசியைப் பாராட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நடிகை ஊர்வசி, “அந்த இடத்தில் ஜெயராமைத் தவிர வேறு எந்த நடிகர் இருந்திருந்தாலும் என்னால் அந்த நகைச்சுவைக் காட்சியில் நடித்திருக்கவே முடியாது. என் அண்ணன் எனக்கு எவ்வளவு நெருக்கமோ, அதைவிட ஜெயராமுக்கும் அவர் மிக நெருங்கிய நண்பர். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜெயராமோ அல்லது இயக்குனர் பாண்டியராஜோ அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. ஒருவேளை அவர்கள் ஆறுதல் என்ற பெயரில் என்னிடம் விசாரித்திருந்தால் நான் உடைந்து போயிருப்பேன்; என்னால் சிரிக்க முடிந்திருக்காது. கலைஞர்களுக்கே உரிய அந்தப் பக்குவத்தோடு அவர்கள் நடந்து கொண்டதால் தான் என்னால் நடித்து முடிக்க முடிந்தது” என்று உருக்கமாகக் குறிப்பிட்டார். இவர்களின் இந்த அர்ப்பணிப்பு கலந்த பேட்டி, ஒரு உண்மையான கலைஞனின் தொழில்முறை அர்ப்பணிப்பு எவ்வளவு ஆழமானது என்பதை உணர்த்துவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்
