LATEST NEWS
“எல்லா ஆதாரமும் என்னோட போன்ல இருக்கு” அதை பார்த்து தெரிஞ்சிக்கோங்க… ஐடி ஊழியர் தற்கொலையில் கணவனின் போதை முகம் அம்பலம்.. அதிர்ச்சியில் உறைந்த பெண்ணின் பெற்றோர்…!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் பகுதியில், போதை கணவனின் தொடர் சித்ரவதை தாளாமல் விக்னேஸ்வரி (27) என்ற ஐ.டி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த விக்னேஸ்வரிக்கும், விழிஞ்ஞத்தைச் சேர்ந்த அபிலாஷ் (32) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தங்களின் இரண்டாவது திருமண நாளைக் கொண்டாடிய சில நாட்களிலேயே, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விக்னேஸ்வரி இந்த துயர முடிவை எடுத்துள்ளார்.
விக்னேஸ்வரி தற்கொலை செய்வதற்கு முன்னதாக எழுதிய உருக்கமான கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், கணவர் மது குடித்துவிட்டு தொடர்ந்து சித்ரவதை செய்து வந்ததாகவும், தந்தை இதய நோயாளி என்பதால் அவரிடம் எதையும் சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் ஏற்றுக்கொண்ட ஐ.டி நிறுவனத்தின் ப்ராஜெக்ட் முடியும் வரை மட்டுமே எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிருந்ததாகக் கூறியுள்ள அவர், தனது மரணத்திற்கு அபிலாஷின் மதுப்பழக்கமே காரணம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தனது செல்போனில் எல்லா ஆதாரங்களும் உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்ததன் பேரில், போலீஸார் அவரது போனை ஆய்வு செய்து, காயங்களின் புகைப்படங்கள் மற்றும் உருக்கமான ஒலிப்பதிவுகளைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், விக்னேஸ்வரியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கணவர் அபிலாஷ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தனியார் பேமெண்ட் ஆப் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அபிலாஷை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். விக்னேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், குடும்ப அமைதிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கும் மதுப்பழக்கம் எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
