LATEST NEWS
அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு பாதுகாப்பில்லையா..? கழிப்பறைக்கு சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி… 16 சவரன் தாலிச் செயின் பறிப்பால் பரபரப்பு..!!
தூத்துக்குடி அருகே அத்திமரபட்டியில் உள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று மதியம் ஒரு அதிர்ச்சிகரமான கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் சாந்தி என்பவர், மதிய இடைவேளையின் போது அங்கிருந்த கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு ஏற்கனவே மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், ஆசிரியை சாந்தியைத் திடீரெனத் தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 16 சவரன் எடையுள்ள தங்க தாலிச் செயினைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். பறிபோன இந்தத் தங்கச் சங்கிலியின் தற்போதைய மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தங்கச் சங்கிலியைப் பறிகொடுத்த ஆசிரியை சாந்தியின் அலறல் சத்தத்தைக் கேட்டு, பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்களும் ஊழியர்களும் ஓடி வருவதற்குள், அந்த மர்ம நபர் அங்கிருந்த அடர்ந்த வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுவிட்டார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த தூத்துக்குடி மாவட்டப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பள்ளியின் பாதுகாப்பு மற்றும் இழந்த நகையை மீட்பது தொடர்பாக, தப்பியோடிய கொள்ளையனைப் பிடிக்கப் போலீசார் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையைத் துவக்கியுள்ளனர்.
