LATEST NEWS
பகீர் திருப்பம்..! காவல்துறை தாக்குதலா..? ஏற்கனவே தலையில் இருந்த கட்டியா..? தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த வழக்கில் காவல்துறை விளக்கம்…!!
தூத்துக்குடியில் விசாரணைக்காகக் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, காவல்துறையினர் தன்னைத் தலையிலும் காலிலும் கடுமையாகத் தாக்கியதாக அருணாச்சலம் பேசுவது போன்ற வாக்குமூல வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்தச் சம்பவம் குறித்துத் தூத்துக்குடி காவல்துறைத் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அருணாச்சலத்தைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோதே அவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும், அதைத் தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அருணாச்சலத்தின் தலையில் ஏற்கனவே கட்டி ஒன்று இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்தச் சம்பவம் ‘லாக்கப் மரணம்’ கிடையாது என்றும், அருணாச்சலம் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்படவில்லை என்றும் காவல்துறைத் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உயிரிழந்த இளைஞரின் வாக்குமூல வீடியோ வெளியாகி உள்ளதால், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
