LATEST NEWS
“யார் எட்டப்பன் என்று தேர்தல் முடிவில் தெரியும்…” தவெக கூட்டத்தைப் புறக்கணித்து.. கனிமொழி எம்.பி. அதிரடி..!!
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த தமிழக வெற்றிக் கழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தை திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் புறக்கணித்தனர். மேலும், மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், தொகுதி மறுவரையறை தொடர்பாக அவசரமாகக் கூட்டம் நடத்துவது காவிரிப் பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
தவெக அரசு நடத்தும் இந்த அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்றும், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தங்களின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கூட்டத்திற்கு முன்பே விளக்கமளித்திருந்தார். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக கூட்டிய இந்த எம்.பி.க்கள் கூட்டம் எதற்காக என்று தெளிவாக இல்லை என்றும், இது முற்றிலும் தேவையற்றது என்றும் சாடினார். மேலும், தேர்தல்கள் முக்கியமல்ல; தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்குப் பாதிப்பு வரக்கூடாது என்பதும், மாநிலத்தின் நலனுமே திமுகவின் முக்கிய எண்ணம் என்றும் வலியுறுத்தினார்.
சமீபத்தில் தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, “தொகுதி மறுவரையறையை யார் ஆதரிக்கிறார்களோ அவர்கள் எட்டப்பன்” என்று கூறியது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “யார் எட்டப்பர்கள், யார் முதுகில் குத்தியவர்கள், யார் நேர்மையாக அரசியல் செய்கிறார்கள் என்பது தேர்தல் முடிவுக்குப் பின் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்” என்று கனிமொழி பதிலளித்தார். மேலும், இந்தக் கூட்டம் திசைதிருப்பும் வேலையைத் தவிர வேறெதுவும் இல்லை என்றும், நல்ல நோக்கம் இருந்தால் கூட்டம் முடிந்து இதுவரை ஏன் எந்தத் தீர்மானமும் வெளியிடப்படவில்லை என்றும் தவெக அரசிற்கு அவர் கேள்வி எழுப்பினார்.
