LATEST NEWS
“அமைச்சரவை மாற்றத்தில் சமரசமே கிடையாது” அமைச்சரவையில் அதிரடி சீரமைப்பு..? முதலமைச்சர் விஜய்யின் எச்சரிக்கையால் தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற தகவல்கள் மாநில அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய அமைச்சரவையில் செங்கோட்டையன் போன்ற மூத்த நிர்வாகிகளைத் தவிர பெரும்பாலானோர் புதுமுகங்களாகவே பொறுப்பேற்றனர். இருப்பினும், தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாத அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் தரப்பில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆட்சி நிர்வாகம் மற்றும் அமைச்சர் பதவிகளைப் பராமரிப்பதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்றும், செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லையென்றால் பதவி பறிக்கப்படும் என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அமைச்சரவை மாற்றப் பட்டியலில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய இடத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்ற தொடக்கத்திலேயே, அரசு விழா ஒன்றில் வைக்கப்பட்ட ஃப்ளெக்ஸ் பேனரில் தனது பெயர் முதன்மையாக இடம்பெறவில்லை எனக் கூறி மேடையிலேயே அதிருப்தி தெரிவித்த சம்பவம் முதல் சர்ச்சையாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து, தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கும் வகையிலான ஆடியோ வெளியீடு, சட்டப்பேரவையில் அவரது உரை மற்றும் கல்வித் தகுதி சார்ந்த பொதுவெளி சந்தேகங்கள் எனத் தொடர்ச்சியான சர்ச்சைகளில் அவர் சிக்கியதால், வரவிருக்கும் மாற்றத்தில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது.
அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த இந்த அதிருப்தியைத் தொடர்ந்து, கட்சியில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, ரசிகர் மன்றக் காலம் தொட்டே கட்சியோடு பயணித்து வரும் முன்னணி நிர்வாகிகள் தங்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காய்களை நகர்த்தி வருகின்றனர். முதலமைச்சரின் கடுமையான நிலைப்பாடும், அமைச்சரவை சீரமைப்பு குறித்த தகவல்களும் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.
