LATEST NEWS
“பக்தியைப் காட்டுங்… பிளாஸ்டிக்கை போடாதீங்க..” பூக்களுக்கு பதில் தண்ணீர் பாட்டில்… பக்தியால் அழியும் மலைப்பகுதியின் இயற்கை அழகு..! வைரல் வீடியோ..!!
லடாக்கின் அழகான மலைப் பகுதியில் ஒரு விசித்திரமான கோவில் உள்ளது. இங்கு மக்கள் கடவுளுக்குப் பூக்கள், பழங்கள் அல்லது இனிப்புகளுக்குப் பதிலாகத் தண்ணீர் பாட்டில்களைப் படைக்கிறார்கள். இந்தப் பழக்கத்திற்குப் பின்னால் ஒரு சோகமான கதை உள்ளது. 1999-ஆம் ஆண்டு வாக்கில், லடாக்கின் ஆள் நடமாட்டமில்லாத இந்தப் மலைப்பாதையில் லாரி ஓட்டுநர் ஒருவர் தாகத்தால் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அப்பகுதி மிகவும் தனிமைப்பட்டதாகவும், குடிநீர் எளிதில் கிடைக்காததாகவும் இருந்தது. அவரது நினைவாகவும், இனி எந்தப் பயணியும் தாகத்தால் அவதிப்படக் கூடாது என்ற எண்ணத்திலும் உள்ளூர் மக்கள் அந்த இடத்தில் ஒரு சிறிய கோவிலைக் கட்டி, வழிப்போக்கர்கள் தண்ணீர் பாட்டில்களைப் படைக்கும் வழக்கத்தைத் தொடங்கினர்.
காலப்போக்கில், பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநர்களின் நம்பிக்கைக்குரிய இடமாக இது மாறியது. ஆனால், தற்போது இந்த வழிபாடு சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கோவிலைச் சுற்றி ஏராளமான காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் குவிந்து கிடப்பதால், மலையின் இயற்கை அழகு பாதிக்கப்படுகிறது. சமீபத்தில் லடாக் சென்ற ‘மனீஷ்’ என்ற பைக் வ்லாகர் இதைப் படம் பிடித்துச் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், “நம்பிக்கையின் பெயரால் இயற்கையைப் பாழாக்குவதுவது சரியல்ல. தண்ணீர் ஊற்றி வழிபட்ட பிறகு, காலி பிளாஸ்டிக் பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டுச் செல்லாதீர்கள்” என்று பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் மனீஷ் ஒரு உள்ளூர் லாரி ஓட்டுநரின் பொறுப்பான செயலைச் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த ஓட்டுநர் கோவிலில் தண்ணீரைப் படைத்து வழிபட்ட பிறகு, காலி பிளாஸ்டிக் பாட்டிலைப் அங்கேயே போட்டுவிடாமல் தனது லாரியிலேயே திரும்ப எடுத்துச் சென்றுள்ளார். அனைவரும் பாட்டில்களை அங்கேயே விட்டுச் சென்றால், அது குப்பை மேடாக மாறிவிடும் என்பதை உணர்ந்து, நாம் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை இந்தச் செய்தி வலியுறுத்துகிறது.
