LATEST NEWS
“அய்யோ என் புள்ள..” புறாவை பிடிக்கப்போய் 50 அடி தொட்டிக்குள் சிக்கிய சிறுவன்.. பதறிப்போன ஊர் மக்கள்… திக் திக் நிமிடங்கள்..!!
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் கிஷோர்குமார் (13), அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் புறா பிடிப்பதற்காகச் சென்றபோது, அங்கிருந்த சுமார் 50 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய கிஷோர்குமார், நீர்த்தேக்கத் தொட்டிக்குள் தவறி விழுந்தார். மேலே வர முடியாமல் தொட்டிக்குள் சிக்கித் தவித்த சிறுவனைக் கண்ட நண்பர்கள் கூச்சலிட்டு உதவி கோரியதையடுத்து, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வாழப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், போராடி நீர்த்தேக்கத் தொட்டிக்குள் சிக்கியிருந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர். தொட்டிக்குள் விழுந்ததில் காயமடைந்த கிஷோர்குமார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
